மனசிலிருந்து மெட்ராஸ் வரை

Tuesday, August 15, 2006

நெஞ்சு பொறுக்குதில்லையே ......

அறை கலைந்து கிடக்கிறது. மனம் அதைவிட மோசமாக கலைந்து கிடக்கிறது. 6 வருடங்களில் இவ்வளவு மோசமாக ஒரு விஷயத்திற்காக ஏங்கியதில்லையடி. என்னை ஆட்டுவிக்கிறாய் பிரமாதமாய் ரம்யா. பொம்மலாட்டத்தில் ஆட்டுவிப்பவர்களின் கையில் ஒரு கோலும், நூலும் இருக்கும். அப்படிதான் ஏதாவது வைத்திருக்கிறாயா நீ என்னை கட்டுப்படுத்த. மாறிக் கொண்டேயிருக்கக்கூடிய உலகில் மாறாமல் இருப்பது அன்பு ஒன்றுதான். அன்புதான் இன்னமும் உலகில் கொஞ்சமேனும் அக்கறையையும், மனிதாபிமானத்தினையும் நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறது.

நம் வாழ்வில் நமக்கான அக்கறையினோடு ஒவ்வொரு அடியினையும் எடுத்துக் கொண்டிருக்கிறேன். பாலாஜி சொன்னது போல, நான் என்பது அடியோடு மறைந்து போய் விட்டிருக்கிறது, நாம் என்று தான் வருகிறது. மாற்றங்களின் முதல் படிநிலையோ என்னவோ. நமக்கான வாழ்வின் திட்டங்கள் பற்றி தான் திட்டமிடுகிறேன். முதலில் நமக்கு தேவை ஸ்மிருதியின் அன்பு. அதுதான் மிக முக்கியம். வழக்கினை பதிவு செய்தல் கூட கொஞ்சம் தாமதிக்கலாம். அவளின் அன்பினை கைவசப்படுத்தாமல் எதுவும் செய்ய முடியாது. இரண்டாவது, வழக்கினை ஊர்ஜிதப்படுத்த ஆதாரங்கள். கைவசமிருப்பது அனைத்துமே குற்றச்சாட்டுகள். ஆதாரங்கள் வேண்டும் நமக்கு. இவர் இந்த காலக்கட்டத்தில் இப்படி சொன்னார் என்பதன் ஆதாரங்கள், அதன் பின் இருக்கும் சுயநலம், MCP, வலிகள், பலாத்காரங்கள், மென்மையாய் வெளியிலும், குரூரமாய் உள்ளிலும் தோற்றமளிக்கும் வன்முறை என காரணங்கள் வேண்டும். அவற்றினை நாம் முதலில் அடுக்க வேண்டும். வழக்கினை நடத்துதலுக்கான திடமும், மன வலிமையையும், மிகவும் கீழ்த்தரமாக கேட்கப்படும் கேள்விகளை எதிர்நோக்கும் உள்ள உறுதியையும் பெற வேண்டும். தாமதமானாலும் பரவாயில்லை, ஆனால் உறுதியாக, நேர்மையாக, எதிர்க் கொண்டு நிற்போம்.

சட்டத்திற்காக சட்டத்தின் முன் வகுத்துள்ள நெறிகள் பிறழாமல் உன் மனதில் நீ பட்டதினையும், உன் வாழ்வின் பிரிவுகான காரணங்களையும் எவ்வித சஞ்சலங்களும் இல்லாமல் சொல் ரம்யா. உறுதியாய், நேர்மையாய், திடமாய் சொல். இந்த காலக்கட்டங்களில் உன் உறவுகளிடமிருந்தும், பிறரிடமிருந்தும் பல்வேறு விதமான கெஞ்சல்கள், மிரட்டல்கள், சென்டிமெண்டுகள் என வர ஆரம்பிக்கும். இவர்கள் யாரும் நீ நான்கு வருடங்கள் தனிமையில் இருந்த போது கூட வரவில்லை. இப்போதும் நீ சமாதானமாய் போனால், கூட இருக்கப் போவதில்லை. ஆகவே, புறந்தள். பாரதி தெளிவாக பாடி வைத்து விட்டு போயிருக்கிறான் "நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால், நெஞ்சு பொறுக்குதில்லையே"

என் நெஞ்சும் பொறுக்காமல் தான் இவ்வளவையும் சகித்துக் கொண்டு, தூரே நின்று பார்த்துக் கொண்டிருக்கிறேன். இதை நேரடியாக நான் இன்று களத்தில் சந்திக்க ஆரம்பித்தால், பிற்காலத்தில் நாம் இணையும் தருணத்தில் பிரச்சனைகள் வருமென்கிற ஒரே காரணத்தினாலேயே தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதையும் தாண்டி, ஸ்மிருதியின் அருகாமைக்காகவும், உன் அரவணைப்பிற்காகவும் இன்னமும் கொஞ்சம் தள்ளி நின்று பின்னாலிருந்து செயலாற்றிக் கொண்டிருக்கிறேன் குட்டி. ஒரு சுதந்திர நாளில் உன் சுதந்திரமும் ஒரு நாள் கைக்கூடும் என்கிற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் - உனக்காகவும், என் குட்டி தேவதையின் திட்டல்களுக்காகவும்.....