மனசிலிருந்து மெட்ராஸ் வரை

Wednesday, May 24, 2006

நல்லவனாய் இருப்பதன் பயன்?

இன்றைக்கு அப்படி பேசியிருக்கக் கூடாது உன்னோடு. மும்பை போகும் அவசரம் ஒரு பக்கம், அமெரிக்க அலுவலகம் ஒரு பக்கம் என பிரச்சனைகள் பிய்த்தெடுத்தாலும் கொஞ்சம் நிதானமாய் இருந்திருக்க வேண்டும். ஆனாலும், உள்ளூற வருத்தம் இருக்கதான் செய்கிறது. என்ன நல்லவனாக இருந்து என்ன பிரயோசனம் ? என்னுடைய தேவதையினை அடைய முடியாது என்ற போது நல்லவனாக இருந்தால் என்ன, இல்லாமல் போனால் என்ன? பெரியதாக ஒன்றும் இழப்பிருக்காது என்று தான் தோன்றுகிறது.

ஒவ்வொரு முறையும் பொண்டாட்டி என்று அழைக்கும் போது எங்கோ முள் தைக்கிறது. மனசு முழுக்க கொடுத்த பிறகு தனியாய் வாழ்வது என்பது ஒரு மகா நரகம். நரகத்தில் தான் என் நண்பர்கள் இருக்கிறார்கள் என்று விளையாட்டாய் சொல்வதுண்டு. ஆனால், இன்றைக்கு இந்த நரகத்தில் நான் மட்டும்தான் இருக்கிறேன், தனியாளாய்.

உண்மையான காதல் என்ன இவ்வளவு அரக்கத்தனமாய் இருக்கிறது. உன் நினைவுகள் குத்தி கிழித்துக் கொண்டேயிருக்கின்றன. எவ்வளவுதான் முயன்றாலும், நீ எனக்கு உரிமையானவள் இல்லை என்பது மட்டும், பல்லிடுக்கில் மாட்டிய சிறு துண்டாய் எப்போதும் இழுத்துக் கொண்டேயிருக்கிறது. நேசிப்பது தவறென்றால், உலகில் இருப்பதற்கே சில பிரச்சனைகள் இருக்கின்றன.

அனுவோடு அரை மணிநேரம். பத்மா அரவிந்தோடு 20 நிமிடம். எஸ்ஸலோடு 2 மணிநேரம். எல்லோரும் நான் தெளிவாக இருக்கிறேன் என்று தான் சொல்கிறார்கள். ஆனால், நீ இல்லாமல், இந்த தெளிவினை வைத்துக் கொண்டு என்ன செய்வது. என்னுடைய பிரச்சனை நான் நேர்மையாக இருப்பதுதான் என்று மட்டும் புரிகிறது. ஆனாலும், என்ன செய்வது, என்னை என்னால் மாற்றிக் கொள்ள முடியாது. அனு சொன்ன ஒரு வார்த்தை தான் நினைவுக்கு வருகிறது. "எல்லா பெண் ஜென்மங்களும் அப்படிதா நாராயண், என்னதான் மனசு நினைத்தாலும் விட்டு வரமுடியாது"

நான் சொல்ல நினைத்தது.. எல்லா ஆண் ஜென்மங்களும் இப்படிதான் வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் நடுவிலிருந்து கொண்டு ஈகோ பெருத்துபோய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்...

ரம்யா, சீக்கிரம் விடுதலையாகு, எனக்காகவோ, உனக்காகவோ இல்லாமல் போனாலும், நமக்காக வா. காத்திருக்கிறேன்.